Sunday, June 24, 2018

வன்முறை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது: பிரதமர் மோடி அறிவுரை

SHARE

வன்முறையும், கொடூரமான செயல்களும் ஒருபோதும் ஒரு பிரச்சினையை தீர்க்கத் தீர்வாக அமையாது. அஹிம்சை மட்டுமே அனைத்தையும் வெல்லும் திறன் கொண்டதாகும் என்று 45-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
பிரமதர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்று வானொலியில் மனதில் இருந்து பேசுகிறேன் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு உரையாற்றி வருகிறார், அந்த வகையில் 45-வது மன்கிபாத் நிகழ்ச்சியில் இன்று மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
கிரிக்கெட்
 
முதலில் நான் இந்திய கிரிக்கெட் அணியைப் பாராட்டுகிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றபின், கோப்பையைப் பெறும்போது, எதிரணி வீரர்களையும் அழைத்து கோப்பையைப் பெற்றுக்கொண்டு, புகைப்படம் எடுத்துக்கொண்டதைப் பாராட்டுகிறேன். இதுதான் சிறந்த வீரர்களுக்கான அடையாளமாகும்.
இந்தப் போட்டியைப் பார்த்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி, எனக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்திருந்தார். தங்கள் நாட்டு அணியினரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் அமைத்துக்கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி நடந்தது. அந்தப் படுகொலை நடந்து அடுத்த ஆண்டுடன் 100 ஆண்டுகள் முடிகிறது. இந்தப் படுகொலை என்பது ஒட்டுமொத்த மனிதநேயத்தை வெட்கப்பட வைக்கும் சம்பவமாகும். இந்த நாள் ஒரு கறுப்பு நாளாகும். அதிகாரத்தையும், ஆட்சியையும் தவறாகப் பயன்படுத்தியவர்கள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தனர். எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறையும், கொடூரமும் தீர்வாகாது. அமைதியும், அஹிம்சையும் மூலமே அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.
ஜிஎஸ்டிக்கு புகழாரம்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கூட்டுறவு கூட்டாட்சி முறைக்குச் சிறந்த உதாரணமாகும். ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவடையப் போகிறது. நாட்டில் அதிகாரிகள் ராஜ்ஜியம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நேர்மையின் அடையாளமாக ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் நலனுக்காக அனைத்து மாநிலங்களும் ஒருமித்த முடிவு எடுத்து ஜிஎஸ்டி எனும் புதிய வரி முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி குறித்து முடிவு எடுக்க மாநிலங்களின் பிரதிநிதிகள் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இதுவரை 27 முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூடியுள்ளது. ஜிஎஸ்டி வரி ஒற்றுமையின் வெற்றியாகும், நேர்மையின் கொண்டாட்டமாகும்.
எஸ்பி முகர்ஜி
நாட்டில் முதன்தொழில்துறை அமைச்சராக இருந்தவர் ஷியாமா பிரசாத் முகர்ஜி. இவர் நாட்டின் தொழில்மயமாக்கலுக்கு அடிக்கல் நாட்டியவர். நாட்டின் தொழில்துறை முன்னேற்றத்துக்கும், ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் முகர்ஜி முக்கியக் காரணமாக அமைந்தார்.
குருநானக் 550-வது பிறந்தநாள்
2019-ம் ஆண்டு சீக்கிய மத குருவான குருநானக்கின் 550-வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. சமூகத்தில் சாதிவாரியான பிரிவினைகள் முடிவுக்குக் கொண்டுவர குருநானக் விரும்பினார். ஏழைகளுக்குச் சேவை செய்வதே கடவுளுக்கு செய்யும் தொண்டு என்று தீவிரமாக நம்பியவர் குருநானக். குருநானக்கில் நலப்பணியில் முக்கியமானது, ஏழை மக்களுக்கான சமுதாய சமையற்கூடமாகும்.எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும், சாதியைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து சமையலுக்கு உதவலாம், உணவு உண்ணலாம்.
சர்வதேச யோகா தினம்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சியாச்சின்மலை உச்சி, போர்க்கப்பல்கள், விமானத்திலும், நிலத்திலும் யோகா செய்தது இந்தியர்களுக்குப் பெருமை அளிக்கும் விஷயமாகும். சவுதி அரேபியாவில் முதல் முறையாக யோகா கொண்டாடப்பட்டது, மனிதநேயத்தை இணைக்கும் செயலாகும்.''
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 comments: