Sunday, April 8, 2018

கமல்ஹாசன் அரசியலில் காமெடி நடிகராகி விட்டார்

SHARE

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை டி.எம். கோர்ட்டு, மகபூப்பாளையம் ஆகிய இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்து பணியாற்றினார். உடல் நலத்தைக்கூட பேணாமல் மக்கள் நலனை பாதுகாத்ததால் அவர் இன்றைக்கு நம்மோடு இல்லை. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திட்டங்கள் தமிழக மக்களுக்கு பயன்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆண்கள் மட்டுமே சாதிக்கக்கூடிய அரசியலில் தனி ஒரு பெண்ணாக சாதித்து காட்டியவர் ஜெயலலிதா. அவரது அரசியல் பயணத்தில் அவர் சந்தித்த சோதனைகள் ஏராளம்.

ஜெயலலிதாவை இழிவாக பேசியவர்களும் உண்டு. அவர் பயணம் செய்த வாகனத்தின் மீது லாரியை விட்டு மோதி கொலை செய்ய முயற்சித்த கும்பலும் உண்டு.

அதையெல்லாம் துணிவோடு சந்தித்து அ.தி.மு.க. இயக்கத்தை நாட்டின் 3-வது மிகப்பெரிய கட்சியாக உருவாக்கித் தந்தவர் ஜெயலலிதா.

காவிரி பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு எத்தனையோ மிரட்டல்கள் வந்தன. ஆனாலும் தமிழகத்தின் உரிமையை மீட்க சட்ட போராட்டம் நடத்தி சாதனை படைத்தார்.

பெண்களின் குறைகளை போக்க மகளிர் காவல் நிலையம் உருவாக்கி பாகிஸ்தானே பாராட்டும்படி செயல்பட்டார்.

அமைதி பூங்காவாக திகழ்ந்து வரும் தமிழகத்தில் ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த தி.மு.க. சதி செய்து வருகிறது.

மு.க.ஸ்டாலின் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று தினமும் கபட நாடகம் நடத்தி வருகிறார். அவரது ஆசை ஒருபோதும் நிறைவேறாது.

ஆட்சியில் இருந்த போது காவிரி பிரச்சினையை தீர்கக்க தவறிய தி.மு.க. இன்றைக்கு போராட்டம் நடத்தி மக்களை குழப்பபார்க்கிறது.

மேலும் நடிகர்களும் நாடாள துடிக்கிறார்கள். புதுக்கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசன் நல்ல நடிகர் தான். ஆனால் திரைப்படங்களில் பொது மக்களுக்கு அவர் என்ன சமுதாய சிந்தனைகளை வெளிக்காட்டினார்?

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மக்களுக்கு தேவையான கருத்துக்களை திரைப்படத்தின் வாயிலாக புரிய வைத்தார். ஆனால் கமல்ஹாசன் சினிமாவில் என்ன செய்தார்? என்பது எல்லோருக்கும் தெரியும்.

அவர் அரசியலில் காமெடி நடிகராக மாறிவிட்டார். கூட்டம் கூடிவிட்டால் யாரும் தலைவராகி விட முடியாது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. முதல்-அமைச்சராகவும் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் நாடாள முடியாது. தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.

இவ்வாறு அவர் பேசினார்.
SHARE

Author: verified_user