Thursday, February 1, 2018

அதாவது...என்னவென்றால்....?

SHARE

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!
நிலை விளக்குகள் நாற்புறமும் எரிய,யானைத் தந்தங்களினால் செய்த கால்களை உடைய கட்டிலிலே மென்மையான படுக்கையின் மீதேறி, கொத்துமலர் அணிந்த கூந்தலாள் நப்பின்னையின் முலைகளைத் தன்மேல் வைத்துக்கொண்டு உறங்கும் பரந்த மார்புடையவா, வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்.
இது ஆண்டாள் எழுதிய பாடல்களில் ஒன்று என சொல்லப்படுகிறது. இது பக்தி இலக்கியமா...? லௌகீகமா...? காதலா...?  என வாதப் பிரதி வாதங்களும் எழுப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பாண்டிய நாட்டின் திருவில்லிபுத்தூரிலே உள்ள நந்தவனம் ஒன்றின் துளசி வனத்திடையே பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டு  கோதையர் என்னும் பெயரிட்டு வளர்த்து வந்த பெண்மணியே இந்த ஆண்டாள். இவள் பெரியாழ்வாரால் வளர்க்கப் பெற்றதால், ''ஆண்டாள் திருமகளார்' என்றும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்றும் போற்றப் பட்டாளாம் செய்யுள் வடிவ அடிப்படையில் பாகுபடுத்தப்பட்ட சிற்றிலக்கியத்தின்   ஊடாக உலக மக்களை உய்வித்து அடிமை கொண்டவளாக கருதப்பட்டதால் 'ஆண்டாள்' என்றும் அழைக்கப்பட்டாள்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டு காலத்து வரலாற்றைக் கொண்ட இந்த ஆண்டாள் குறித்த சர்ச்சைதான் இன்றைய தமிழ் உலகின் பேசுபொருள்
இலக்கிய முன்னோடிகள் பலர் சபையில் 'தமிழை ஆண்டாள்' என்னும் தலைப்பில் கவிஞர் வைரமுத்து, விருதுநகர் மாவட்டம், இராசபாளையத்தில் இடம்பெற்ற தமிழ் இலக்கிய விழா ஒன்றில் ஆண்டாள் குறித்து ஆற்றிய உரையே இந்த சர்ச்சையை கிளப்பி இந்துப் பெருமக்களை எல்லாம் கிளர்ந்தெழ வைத்துள்ளது அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக் கழகம், ஒன்று சுபாஷ் சந்திர மாலிக் என்பவரை  ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட INDIAN MOVMENT: Some aspects of dissent protest and reform (இந்திய இயங்குதலின் சில எதிர்மறை அம்சங்களும் சீர்திருத்தங்களும்) என்னும் நூலில் ஆண்டாள் குறித்து இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டுள்ளது Andaal was herself a devadasi who lived and died in the SRI RSNKAM TEMPLE(ஸ்ரீ ரங்கம் ஆலயத்தில் வாழ்ந்து அங்கேயே மரணித்த ஆண்டாள் என்பவள் ஒரு தேவதாசி குடும்பத்தை சேர்ந்தவlள்).
இந்தக் குறிப்பை அடிப்படையாக வைத்த அன்றைய வைரமுத்துவின் உரையே இன்றைய இந்துத்துவ புயலைக் கிழப்பியுள்ளது. சுபாஷ் சந்திர மாலிக்கின் இந்தக் கருத்தை இந்துப் பக்தர்கள்  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், இந்து வெறியர்கள் சீறிப் பாய்வார்கள்  என்றாலும்.ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், நாஸ்திக சிந்தனையாளர்களும் இதனை கவனத்தில் எடுக்கவே செய்வார்கள்.
எட்டாதன எட்டுவதற்கும் கிட்டாதன கிட்டுவதற்கும் மனிதகுலத்தின் முதல் மூலதனம் நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கைதான்'
பொதுவான ஆய்வுரைகளில் பல கோணங்களில் கருத்துகள் இடம் பெறுவது இயல்பான மரபு. அந்த விழாவில் அதற்கு முன்பும் பின்பும் ஆண்டாளின் தமிழ் குறித்து வைரமுத்து தனக்கே உரிய பாவனையோடு சிறப்பாக எடுத்துரைத்ததை பொதுமக்களும் ஆன்மிகவாதிகளும் கைதட்டி இரசித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த ஆய்வுக் குறிப்பை மட்டும் உருவி எடுத்துக்கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலர் எச். ராசா, ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்த சில கருத்துகளுக்கு எதிர்வினை என்னும் பெயரில் வாய் கூசும் வார்த்தைகளால் வசைமாரி பொழிய அதன் தொடர்ச்சி இந்தியாவையும் தாண்டி இந்துத்துவ வாதிகளை கிளர்ந்தெழ வைத்துள்ளது.
ஏற்கெனவே எச். ராசா, தந்தை பெரியார் குறித்தும் ஏனைய திராவிட தலைவர்கள் பற்றியும் பேசிய பேச்சுகள் மக்களாட்சியை விரும்புவோரின் விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தன. வரலாற்றைத் திரித்துக் கூறுவது, எந்த தலைவரானாலும் ஏக வசனத்தில் பேசுவது, ஆத்திரமூட்டும் பேச்சால் வம்புச் சண்டைக்கு இழுப்பது; எப்படா மோதல் ஏற்படும், அதை ஊதிப் பெரிதாக்கி தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள காத்திருப்பது  என அவரது பேச்சும் பாணியும் இருக்கின்றன.
கவிஞர் வைரமுத்து பேச்சுக்கு மாற்றுக் கருத்தை வெளியிடுவது தப்பென்று  யாரும் சொலலவில்லை, அது ஜனநாயகமும் இல்லை. ஆனால் வைரமுத்துவின் தாயையும் தாரத்தையும்கூட இழுத்து தரம்தாழ்த்தி, மிகவும் கேவலமாக பேசியிருப்பது ஏற்புடையதா...? என்பதே கேள்வி.
எச்.ராசாவின் அத்துமீறிய பேச்சு முகநூல், ட்விட்டர், என சமுக வலைத் தளங்கள், பொது ஊடகங்கள் வாயிலாக அனலெனப் பரவ... வைரமுத்துவுக்கும் அவரை ஆதரித்து கருத்து வெளியிட்டவர்களுக்கும்  எதிரான போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின
'ஆண்டாள் தமிழ் மரபில் மலர்ந்தவர், பக்தி இலக்கியத்தில் உச்சம் தொட்டவர், அவரைப் பற்றிப் பேசும் அருகதை மதவெறியர்களுக்கு இல்லை' என்கின்றனர் தமிழ்க் கவிஞர்களும் சில இலக்கிய கர்த்தாக்களும். பல அரசியல் கட்சியினரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது ராசாவின் அந்த இந்துத்துவ வெறிப்பேச்சு.
இத்தனைக்கும் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்     "ஆண்டாள் விவகாரத்தில் எவரையும் புண்படுத்துவது எனது நோக்கமன்று, புண்பட்டிருந்தால் வருந்துகிறேன், ஆண்டாள்பற்றிய கருத்துகள் எல்லாம் ஆண்டாளின் பெருமைகளைப் பேசுகின்றன, ஆண்டாள் குறித்து அமெரிக்காவின் இண்டியானா பல்கலை ஆய்வு நூலில் கூறிய வரிகளை மட்டுமே மேற்கோள் காட்டினேன், அந்தக் கருத்து எனது கருத்து அல்ல, ஆளுமைகளை மேம்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமைப் படுத்துவதல்ல, அதற்கு இலக்கியமே தேவை இல்லை" என்று தன்னிலை விளக்கத்தையும் தெரிவித்திருந்தார். மாலிக்கின் அந்தக் கட்டுரையை வெளியிட்ட தினமணி பத்திரிகையும் வருத்தம் தெரிவித்திருந்தது. ஆனாலும் வைரமுத்துவுக்கு எதிரான விமர்சனத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக பாலியலில் பிரபலம் பெற்ற சுவாமியார் நித்தியானந்தாவின் தூண்டுதலின் பேரில் அவரது சீடர்கள் எனச் சொல்லிக் கொண்டு சில இளம் பெண்களும், வெளிநாட்டினர் சிலரும் வெளியிடும் காட்சிகளும், அவர்கள் வாய் மொழிகளும்  தமிழ் இனத்தையே வெட்கித் தலை குனிய வைக்கின்றது.
வைரமுத்து மேற்கோள் காட்டிய அந்த ஆய்வு வெளிவந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இத்தனைக் காலம் அமைதியாக இருந்துவிட்டு இப்போது துள்ளிக் குதிப்பானேன் என்கின்ற நியாயமான கேள்வியும் எழுகின்றன.
இறைவனை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் உடன்பட்டுப் பாடுவதும் அதற்கேற்ப ஆடுவதும் இலக்கிய முறைமைகளில் ஒன்று என்கின்றது வரலாறு.
இறைவன் உள்ளத்தை ஆண்டவள் என்கின்ற அடிபடையில் ஆண்டாள் என அழைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் ஒரு கருத்துண்டு, ஆண்டாள் பெண்தானா...? என்கிற ஐயத்தை ராஜாஜியைப் போலவே எழுப்புவதோடு... அவள் பெண்ணாகவே இருந்தாலும் அக்காலத்தில் தேவதாசி என்பது இறைப்பணி ஆற்றுபவர்களைக் குறிப்பதே என்கின்ற வாதங்களும் முன்வைக்கப் படுகின்றன.
ஒரு தவறை எதிர்க்க மற்றொரு தவறைக் கையாள்வது தவறாகும்.
இந்துத்துவ வெளிப்பாடுகளோடு இந்தியாவை இன்று ஆளும் பாஜக அரசு இந்த விடயத்தில் வெளிப்படையாக மௌனம் காத்தாலும் கொல்லை வழியாக  பெரும் சர்ச்சையாக்கி, கலவரமாக மாற்ற முயல்வதாகவும் சொல்லபடுகிறது. இந்த அணுகுமுறை ஆண்டாளைப்பற்றிய உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைக்குமா என்பது கேள்விகுறியே.
இறை இலக்கியத்திற்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய கொடை ஆண்டாள். ஆண்டாளின் தமிழைப் படிக்காத, ஆண்டாளை இதுவரை முன்னெடுக்காதவர்கள் எல்லாம், ஆண்டாளுக்குக் குரல் கொடுப்பதுபோல் மதவெறித் தீயைப் பற்ற வைக்கப் பார்க்கிறார்கள். ஆண்டாள் ஒரு சமஸ்கிருதப் புலவர் அல்லர். தமிழ்ப் புலவர் எனவும் ஆண்டாளைப்பற்றி தமிழ்ப் பகைவர்களும் இந்துத்வவாதிகளும் பேசக் கூடாது எனவும் ஆண்டாள் மதவெறிக் கும்பலுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாதவள் எனவும் பல கோணங்களில் கருத்துக்கள் வெளியாகின்றன.
இந்துத்துவம் வன்முறை அரசியலைக் கையில் எடுக்கத் துடிப்பதையே எச். ராசா போன்றோர் மூட்டியிருக்கும் பகையுணர்வுத்தீ அடையாளப்படுத்துகிறது.
நொந்து போன வைரமுத்து, "இப்படிப்பட்ட கூட்டத்தில் தமிழ் வளர்க்க வெட்கப்படுகிறேன்" என்று வேதனைப்பட்டுள்ளார்.
வைரமுத்து தமிழுக்கு என்ன செய்து விட்டார் என்கின்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
இந்தத் தீ எரிந்துகொண்டிருக்க சென்னை மாநகரில் நடந்த தமிழ்-சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழா ஒன்றில்  தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால்,சின்ன சங்கராச்சாரியார், நூலின் தொகுப்பு ஆசிரியர் ஹரிகரனின் புதல்வரான பாஜக தேசிய செயலாளர் எச். ராசா, தமிழறிஞர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டிருந்தனர் .அந்த விழாவில் அரங்கேறிய ஒரு நிகழ்வும்  ஒட்டுமொத்தத் தமிழர்களையும் மேலும் கொந்தளிக்க வைத்திருக்கிறது.
விழா மேடையில் தனிமேடை அமைப்பில் உருவாக்கப்  பட்டிருந்த சிம்மாசனத்தில் உட்கார வைக்கப்படிருந்தார்   சின்ன சங்கராச்சாரியார் விஜயேந்திரர். மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது அனைவரும் எழுந்து நின்றுமரியாதை செலுத்த அவர்மட்டும் கண்களை மூடிய நிலையில் அலட்சியமாக  அமர்ந்திருந்தார். ஆனால் விழா முடிவில் இந்திய  தேசிய கீதம் இசைத்தபோது மட்டும் எழுந்து நின்று அதற்க்கு மரியாதை செலுத்தினார்.
ஆளுநர் உள்பட விழாவில் இருந்த அத்தனை பேரும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்த விஜயேந்திரர் மட்டும் அவமரியாதை செய்தது தொடர்பில் விமர்சனங்கள் பரவியபோது'தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமதிக்கவில்லை என்றும் அவர் அப்போது தியானத்தில் இருந்தார்' என்றும் சங்கரமடத்தால் இந்துத்துவ  விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. நடந்தவைக்கு சிறு  வருத்தம் கூட தெரிவிக்காமல் புனித முலாம் பூசிப் பார்த்தது  தமிழர்களிடையே மேலும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது என்கின்றனர் யதார்த்த வாதிகள்.
திருவில்லிபுத்தூர் ஆண்டாளுக்காக கவிஞர் வைரமுத்துவை வசைபாடிய சங்கரமட பக்தர்கள் இந்த விடயத்தில்  வாய்மூடி மௌனம் காப்பது ஏன்...? என்கின்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது  தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தபோது, தியானம் செய்தேன் எனச் சொல்வதை  இந்துத்துவ ஆணவத்தின் உச்சம் என்றே கொள்ள வேண்டும். ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியவில்லை என்றால், சொல்பொருள் நூலான அகராதியை நாடுகின்றோம்.
பிறரை மதிக்காமல் எதிர்த்துப் பேசுபவனை அகராதி பிடித்தவன் என்கிறோம்.
ஓர் அகராதி வெளியீட்டு நிகழ்வில் சமநிலையற்ற நிலையில் சங்கடத்தை ஏற்படுத்திய சங்கராச்சாரியாரை நினைத்து...
எழுத்துப் பிழை
கருத்துப் பிழை
எண்ணப் பிழை
ஆகிய இந்த மூன்றில் எதை வைத்து அர்த்தம் கொள்ளலாம் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றே.
27/01/2018
SHARE

Author: verified_user