Thursday, February 1, 2018

தேர்தல் கட்சிகளுக்குரியதா மக்களுக்குரியதா?

SHARE

தேர்தல் கட்சிகளுக்குரியதா மக்களுக்குரியதா? இது தவிர்க்கப்பட முடியாத, முக்கியமானதொரு கேள்வி. இந்தக் கேள்வி எழுந்ததே தேர்தலை மக்களிடமிருந்து கட்சிகளும் அரசியல்வாதிகளும் பறித்துக் கொண்டு தாம் அதிகாரம் செலுத்துவதனாலேயே.
ஆனால், தேர்தலானது மக்களுக்குரியதே. தங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் தங்களுடைய பிரச்சினைகளை அதிகார மையத்தில் பேசி உரிய முறையில் அவற்றைத்தீர்ப்பதற்குமான பிரதிதிகளைத் தங்கள் சார்பாகத் தெரிவு செய்வதற்கான ஒரு ஏற்பாடே தேர்தலாகும்.
இதை மக்களின் பேரில் இயங்குகின்ற கட்சிகளோ, தலைவர்களோ, அரசியல்வாதிகளோ, புத்திஜீவிகளோ புரிந்து கொண்டு நடப்பதாக இல்லை.
பதிலாக கட்சிகளுக்கும் அரசியலில் ஈடுபடுவோருக்குமானது தேர்தல் என்றமாதிரியே இவர்கள் செயற்படுகின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், மக்களின் பக்கமாக நின்று செயற்பட வேண்டிய ஊடகங்களே இதை மறந்து விட்டு, கட்சிகளுக்காகத் தேவாரம் பாடிக் கொண்டிருக்கின்றன என்பதுதான்.
உண்மையில் தேர்தலோ அரசியலோ கட்சியோ தலைமையோ எல்லாம் மக்களுக்கானவையே தவிர, இவற்றுக்காக மக்கள் இல்லை.
ஏன் ஊடகங்களும் கூடத்தான்.
ஆனால், நம்முடைய சூழலில் இதையெல்லாம் புரிந்து கொண்டு நடப்பதாக இல்லை. பதிலாக இந்தப் பூமியிலுள்ள எல்லாமே தமக்காக, தமது நலனுக்காக என்ற எண்ணத்தோடுதான் அரசியல் தரப்புகள் எண்ணிச் செயற்படுகின்றன. இதுதான் உலகப் பேரவலம்.
மக்களுக்காகத் தாம் என்பதற்குப் பதிலாக தமக்காகவே மக்கள் என்ற நிலைப்பாடு.
இது அடிப்படையிலேயே முரணானதாகும். மட்டுமல்ல, மக்கள் விரோதமானதுமாகும்.
ஆனால் இந்த அடிப்படையில்தான் கடந்த கால, நிகழ்கால அரசியல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதை மறுத்துரைப்பதற்கு அறிஞர்களிடம்கூட விழிப்புணர்வோ துணிச்சலோ திராணியோ கிடையாது.
பதிலாக இதற்கு அவர்களும் ஏராளம் வியாக்கியானங்களைச் செய்வார்கள். அவ்வளவும் மக்கள் எதிரான செயற்பாடுகளே.
இதனால்தான் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். தோற்கடிக்கப்படுகிறா்கள். சனங்கள் நம்பிக்கையோடு வாக்களிக்கிறார்கள். அவ்வளவு நம்பிக்கையும் இரக்கமில்லாமல் கொள்ளையடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் தாம் வெற்றியடைய வேண்டும் என எண்ணுகிறார்கள். பதிலாக ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள் - ஏமாற்றப்படுகிறார்கள்.
இது ஏன் நிகழ்கிறது என்றால், நாம் மேலே சொன்னதைப்போல தலைகீழான முறையில் மக்களுக்கு விரோதமாகச் செயற்படுவதால்தான்.
ஆகவேதான் இந்த உள்ளுராட்சித் தேர்தலிலும் மக்கள் எதையும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்கிறேன். ஏனெனில் மக்களுக்கு முன்னே நிற்கின்ற அத்தனை கட்சிகளும் மக்களைத் தின்று ஏப்பம் விட்ட வரலாற்றையே கொண்டவை. இதில் சிலவற்றுக்கு விகித வேறுபாடுகள் இருக்கலாமே தவிர, சுத்தமானவை, சன விசுவாசம் கொண்டவை என்று எதுவுமே இல்லை.
அப்படியென்றால், “சுத்தமான தங்கக் கட்சி எது?” என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான பதிலும் நம்மிடமே உள்ளது. அதாவது, சனங்களாகிய நம்மிடம்.
முதலில் நாம் தகுதியுடைய வாக்காளர்களாக இருக்க வேணும். தகுதியுடைய வாக்காளர்கள் என்பது, அரசியல் தெளிவு, சமூக அக்கறை, வரலாற்றறிவு, யதார்த்த நிலையைப் பற்றிய புரிதல், உண்மையாளர்களைக் கண்டறிதல், எதிர்காலம் பற்றிய சிந்தனை போன்றவற்றைப் பற்றி அடிப்படையான அளவிலாவது கொண்டிருத்தல்.
இவை இருந்தால்தான் நம்மால் சரியான அரசியல் தெரிவைச் செய்ய முடியும். கட்டிடமொன்றைக் கட்டுவதாக இருந்தால், அதற்குரிய அறிவும் அனுவமும் தேவை. மருத்துவத்தைச் செய்வதாக இருந்தால், அதற்குரிய அறிவு அவசியம். பொருள் ஒன்றைக் கொள்வனவு செய்யப்போகிறோம் என்றால், அதைப்பற்றிய தகவல்களும் அறிவும் வேணும். வாகனம் ஒன்றை வாங்கப்போகிறோம் என்றால் அதைப்பற்றிய கொஞ்ச அறிவாவது இருக்க வேண்டாமா? அப்படித்தான் அரசியல் தெரிவொன்றைச் செய்யப்போகிறோம் என்றால், அதற்கான அறிவு அவசியம் தேவை.
தேர்தலின் மூலமாக நாம் நமக்குப் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்ய வேணும். நமக்குப் பொருத்தமானவர்கள் என்றால், நம்மில் யாருக்குக் கரிசனை இருக்கிறதோ அவர்களைத் தெரிவு செய்ய வேணும். அவர்கள் நிச்சயமாக நல்லதொரு கடந்த கால வாழ்க்கை முறையையும் செயற்பாட்டு வழியையும் கொண்டவர்களாக இருக்க வேணும். அத்துடன் தர்க்கபூர்வமாகவும் நியாயமாகவும் நடைமுறைக்குப் பொருத்தமாகவும் எதிர்காலத்தைத் திட்டமிடக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், வினைத்திறன் மிக்கவர்களாக இருப்பது அவசியம். அத்துடன் புதிய சிந்தனையாளர்களாக இருக்க வேணும். எல்லாவற்றுக்கும் அப்பால் சன விசுவாசம் முக்கியம்.
எத்தகையதொரு அரசியல் பண்பாட்டை உருவாக்கப்போகிறோம்? எத்தகைய சமூகம் ஒன்றைக் கட்டமைக்கப்போகிறோம் என்ற கனவு இருக்க வேண்டும். அந்தக் கனவை – எண்ணத்தை – நடைமுறைப்படுத்தக் கூடிய உழைப்பு, முயற்சி, அர்ப்பணிப்பு, தியாகம் எல்லாவற்றையும் செய்யக் கூடியவர்களாக இருக்க வேணும்.
இதுதான் சனங்களுடைய எதிர்பார்ப்பையும் சனங்களின் வெற்றியையும் உறுதிப்படுத்தும்.
இல்லையென்றால், பழைய வேதாளங்களும் பழைய முருங்கையுமாகவே கதையிருக்கும்.
இதை மாற்ற வேண்டுமானால்  முதலில் சிந்திப்போர், அதற்கான அடிப்படைகளை உடையவர்கள் தமக்குள் மாற்றங்களை உருவாக்க வேணும். தாங்கள் மாறிக் கொள்ள வேணும்.
ஆனால், இவர்கள் அதற்குத் தயாரில்லை. இவர்களில் பலரும் கட்சிகளின் விசுவாசிகளாகவே மாறிப்போய், ஊறிப்போயிருக்கிறார்கள். கட்சிக்காரர் என்று எவரும் இருக்கவே கூடாது. இவர்களுக்காக – மக்களுக்காகவே கட்சிகள் இருக்க வேணும்.
மெய்யான அறிவாளி ஒருவர் கட்சிகளுக்கு அப்பால் நின்றே சிந்திப்பார். அவரைக் கட்சி எந்த வகையிலும் கட்டுப்படுத்தவோ செல்வாக்குச் செலுத்தவோ முடியாது. பதிலாக அவர்தான் கட்சியை அல்லது கட்சிகளை வழிப்படுத்துவர். அவற்றின் மீது செல்வாக்குச் செலுத்துவார். இதுதான் அறிவின் பலம். இதுதான் அறிவின் தொழிற்பாடு.
ஆனால், நம்முடைய சூழலை ஒரு கணம் கண்களை மூடிச் சிந்தித்துப் பாருங்கள்.
மக்களுக்கு விரோதமான முறையில்தான் இந்த அறிவுசார் தொழிற்பாட்டாளர்களும் சிந்திக்கின்றனர். செயற்படுகின்றனர்.
இதைத் தவிர்க்க வேணும். இது எளிதானதல்ல. சற்றுக் கடினமானதே. உலகத்தின் எல்லாக் காரியங்களும் கடினமான முயற்சிகளின் பின்னரே வெற்றியளித்துள்ளன. ஏன் உங்களுடைய வாழ்க்கை கூடப் பல்வேறு சிரமங்களின் மத்தியில் இருந்தே உருவாகியது. ஆகவே நிச்சயமாக இந்த நன் முயற்சியின் கடினமான நிலையும் உங்களுக்கு நல்லதொரு விளைச்சலை – பயனைத் தரும். இதுவே அரசியல் உறுதிப்பாடும் விழிப்புணர்வுமாகும்.
சனங்களைப் பொறுத்தவரை அவர்கள் அரசியலில் வெற்றியடைய வேண்டுமாக இருந்தால், முதலில் விழிப்புணர்வடைய வேண்டும். இதனால்தான் விடுதலையின் முதற்படி விழிப்புணரவு என்று சொல்லப்படுவதுண்டு.
இது அரசியலுக்கு மட்டுமல்ல ஆன்மீகத்துக்கும் பிற துறைகளுக்கும் பொருந்தக் கூடியதே.
இன்று நாம் சிந்திப்பது, மக்களின் அரசியல் உரிமைகள் வெற்றியடைய வேண்டும். என்பதைப் பற்றியதே. அதற்கு விழிப்புணர்வு அவசியம். ஆனால், பெரும்பாலான அரசியல்வாதிகளும் கட்சிகளும் இதை விரும்புவதில்லை. சனங்கள் விழிப்புணர்வடைந்து விட்டால், தமது ஜம்பங்கள், ஏமாற்றுக்கள் எதுவுமே எடுபடாது என அவர்கள் கருதுகிறார்கள். அதனால் சனங்களை ஏமாற்றி, அவர்களை எப்பொழுதும் மூடத்தனத்தில் உறைய விடுவதையே இவை விரும்புகின்றன. இது மோசமான வணிக உத்தி. அப்படிப் பார்த்தால் இந்தக் கட்சிகள் எல்லாமே மோசமான வணிக்க உத்தியைப் பின்பற்றுகின்ற கட்சிகள் அல்லவா  என்ற கேள்வி உங்களிடம் எழுகிறது. உண்மைதான். மிக மோசமான – கண்ணியமற்ற வணிகச் சிந்தனையே இது.
இதனால்தான் போராட்டத்தில் உடல், உயிர்த்தியாகம் செய்தவர்களையே தேர்தலுக்கான – அரசியலுக்கான உபயோகப் பண்டங்களாக இவை கடந்த காலத்தில் பயன்படுத்தின. இப்பொழுதும் இதுதான் நிலை.
உள்ளுராட்சி சபைகளின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய மக்களுடைய அடிப்படைத்தேவைகளும் உரிமைகளும் சரியான முறையில் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக பேரரசியல் பேசுவது வேறு எதற்காக?
முழங்காலுக்கும் மொட்டந்த தலைக்குமிடையிலான முடிச்சு என்று ஊர்களில் பெரியவர்கள் சொல்வார்கள். அதைப்போலவே தமிழ்த்தேசிய விடுதலை அரசியல், போர்க்குற்றம் போன்வற்றையும் உள்ளுராட்சி நிர்வாகத்தையும் இணைத்துப் பொருத்த முற்படுவது.
இதற்குப் பதிலாக மக்களை மனதில் நிறுத்தி, அவர்களுக்குச் சிறப்பான, அர்ப்பணிப்பு மிக்க சேவையை ஆற்றுவதன் மூலமே சரியான அரசியலைச் செய்ய முடியும். அத்தகைய சிந்தனையும் நேர்மையும் வினைத்திறனும் உள்ள அணிகளே இன்றைய தேவை. அதுவே புதிய அரசியலுக்கான தொடக்கப்புள்ளிகாக அமையும்.
ஆனால், தமிழ் அரசியற் கட்சிகள் பலவும் இந்த இடைக்கால அறிக்கையை முன்வைத்தே தமது தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த உள்ளுராட்சித் தேர்தலுக்கும் இடைக்கால அறிக்கை மற்றும் அரசியல் தீர்வுக்கும் நேரடித் தொடர்பில்லை என்பதையும் இந்தக் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
இதனால்தான் அவை வரலாற்றில் முதல் தடவையாக அபிவிருத்தியைப் பற்றியும் ஊழல் இல்லாத நிர்வாகத்தைப் பற்றியும் பேசத் தொடங்கியுள்ளன. ஏனென்றால், மக்களுக்கு தொடர்ச்சியாக நிறைவேறாத கனவுகளைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. மக்கள் விழிப்படையத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக இளைய தலைமுறையினர் அரசியலைச் சரியான முறையில் புரிந்து கொள்ள முற்படுகின்றனர்.
“பனை மரத்தை முறித்துப் பாம்பை அடிக்க முடியாது” என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதைப்போல “அலவாங்கினால் மலையைப் புரட்ட முடியாது” என்பதையும் இளைய தலைமுறை விளங்கி வைத்திருக்கிறது. இதனால்தான் இளைய தலைமுறையினர் எம்மை நோக்கி அணிதிரளத் தொடங்கியுள்ளனர்” என்று கூறும் சுயேச்சைக் குழுவொன்றின் வாசகங்களின் உண்மையை நாம் உணர வேண்டும்.

எப்படியோ இந்தத் தேர்தலில் நிச்சயமாகப் புதியதொரு மாற்றம் ஏற்படவே போகிறது. ஆனால், அது பெரிய மாற்றமல்ல. அதைச் சரியாக முன்னெடுத்தால் சரியான – மெய்யான மாற்றத்துக்கான வேராக அமையும.

 தொகுத்துச் சொன்னால், தேர்தல் என்பது மக்கள் தங்களுக்கான அரசியல் தெரிவுகளைச் செய்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகும். ஜனநாயகத்தின் சிறந்த கொடைகளில் ஒன்று தேர்தல் என்பது. ஆனால், அதைச் சரியான முறையில் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கூடியவர்களையும் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றக் கூடியவர்களையும் தெரிவு செய்வதற்கான வாய்ப்பாகக் கொள்ள வேண்டும்.


மக்கள் தங்களுடைய பலத்தைப்பெறுகின்ற ஒரு சந்தர்ப்பம் இதுவாகும். இதையும் தவற விட்டால்...?
SHARE

Author: verified_user

0 comments: