Wednesday, January 31, 2018

ஒட்டாவா தமிழ் மக்களின் பொங்கல் விழா!!

SHARE

ஒட்டாவா தமிழ் ஒன்றியம் ஒருங்கமைத்து நடாத்திய தமிழ் மரபுத் திங்கள் விழா தை 28 2018 அன்று ஒட்டாவாவில் சிறப்பாக நடைபெற்றது. 300 க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் பழந்தமிழர் பாரம்பரியத்தை பேணும் வண்ணம் நடன நிகழ்வுகள், இசை, சிலம்பம் போன்றன இடம்பெற்றது.
கனடாவின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் கௌரவ Andrew Scheer கனடிய சமூகத்தில் தமிழ் பாரம்பரிய மாத மற்றும் தமிழர் பங்களிப்பு பற்றி தமிழர்களை பெருமைகொள்ள வைக்கும் உரையை ஆற்றினார். மனித உரிமைகள் பற்றிய முந்தைய கனேடிய அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாடு மற்றும் 2013 இல் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்பதற்கான தமது கட்சியின் முடிவு எவ்வாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பிரதிபலித்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார். சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களைச் செய்த ஸ்ரீலங்கா மூத்த அரசாங்க அதிகாரிகளுக்கு கனடா நுழைவதற்கு மறுப்பு தெரிவிக்க கடந்த நவம்பர் மாதம் கனடிய அரசை அறிவுறுத்தியதையும் அவர் குறிப்பிட்டார்.
கனடாவின் அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகளும் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வில் உரையாற்றி இருந்தனர். பேச்சாளர்கள் அனைவரும் கனடாவின் வளர்ச்சியில் கனடியதமிழர்களின் காத்திரமான பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹரி ஆனந்தசங்கரி தமது அண்மைய இலங்கை பயணத்தின் போது தான் பார்த்து துயரடைந்த,ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் துன்பங்கள் தொடர்பாக குறிப்பிட்டார். அவர்களின் துயரத்துக்கு தீர்வு காண்பதே எந்த அர்த்தமுள்ள நல்லிணக்கத்திற்கும் ஒரு படிநிலை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் தமிழர்கள் அனைவரும் தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக போராட வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்வின் மேலும் ஒரு சிறப்பம்சமாக ரொரண்டோ, மிசிசாகா மற்றும் மொன்றியல், போன்ற நகரங்களில் இயங்கி வரும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெருமளவில் பங்கேற்றனர்.
வட மாகாண சபை முதலமைச்சர் கௌரவ சி. விக்னேஸ்வரன் இந்த நிகழ்விற்கு தனது வாழ்த்துக்களை அனுப்பியிருந்தார். தமிழர் பரபுதிங்களின் முக்கியத்துவம் மற்றும் ஈழ தமிழர் இனபடுகொலை மற்றும் அதற்கான நீதி தேவை ஆகியவற்றையும் குறிப்பிட்டார்.
தமிழர்களுக்காக 1948 இல் இருந்து குரல் கொடுத்து வரும் உரிமை ஆர்வலர் டாக்டர். பிரையன் செனவிரத்ன, ஆஸ்திரேலியாவில் இருந்து காணொளி செய்தி மூலம் தனது வாழ்த்துக்களையும் ஈழ தமிழர் இனபடுகொலைகளுக்கான நீதி மற்றும் தமிழர்களுக்கான உரிமை தொடர்பாக தான் எழுதிய நூல்கள் பற்றியும் தெரிவித்திருந்தார்.
கெளரவ. ஜாக் மெக் லாரென் தனது உரையின் போது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான முக்கியத்துவம், தமிழ் புலிகளின் மீதான தடையை நீக்குவதன் அவசியம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக எதிர்காலத்திலும் அதற்கு ஆதரவளிப்பதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். மேலும் தமிழ் கனடியர்களை தமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்று அவர் மேலும் ஊக்குவித்தார்.
உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் ஈழத்தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையின் வாழ்க்கைச் சாட்சியாக இருக்கும் டாக்டர் வரரதராசாவும் இந் நிகழ்வில் கலந்துகொண்டார்.
இராப்போசனத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வு கனடா முழுவதும் தை மாதம் கொண்டாடப்படும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டங்களுக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்தது.
SHARE

Author: verified_user

0 comments: